பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. ‘வெற்றி விழா’, ‘சின்ன கவுண்டர்’, ‘திருடா திருடா’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் அவர்.
‘வேட்டைக்காரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘வெற்றி விழா’, ‘திருடா திருடா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்த நடிகர் சலீம் கவுஸ். இது தவிர, பாலிவுட் படங்களான ‘ஸ்வர்க் நரக்’, ‘மந்தன்’, ‘கலியுக்’, ‘சக்ரா’, ‘சரண்ஷ்’, ‘மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ’, ‘திரிகல்’, ‘அகாத்’, ‘த்ரோஹி’, ‘சர்தாரி பேகம்’, ‘கொய்லா’, ‘சிப்பாய்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறை மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் ராமர், கிருஷ்ணர் மற்றும் திப்பு சுல்தான் வேடங்களில் அவர் நடித்து புகழ்பெற்றவர்.
சென்னையில் பிறந்த சலீம் கவுஸ், மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். மும்பையில் வசித்து வந்த அவர், உடல்நலக் குறைவால் காலாமானார். அவரது மறைவு, ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘வெற்றி விழா’ படத்தில் ‘ஜிந்தா’ என்னும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்த சலீம் கவுஸ், தமிழ் சினிமாவின் ரகுவரன் உள்ளிட்ட கவனிக்கத்தக்க நடிகர்களில், வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் என்பது நினைவுகூரத்தக்கது.