தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அரசு மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலை பள்ளி.
பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த விளையாட்டுத் தொடர் நடத்தப்பட்டது. குறு வட்ட அளவில் (Zonal) வெற்றி பெற்ற 18 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டன. கடந்த ஒரு வார காலமாக போட்டிகள் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அரசு மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித கப்ரியேல் மேல்நிலைப் பள்ளியும் விளையாடின.
விறுவிறுப்பான இந்த இறுதிப் போட்டியின் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் பதிவு செய்து சமநிலையில் இருந்தன. அதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் அரசு மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெரம்பூர் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜோசப் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அரசு மதரஸா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரவடிவேல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தேவி செல்வம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவளர் செல்வம் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக அரசு மதரஸா மேல்நிலைப்பள்ளி வரும் டிசம்பர் மாதம் நாமக்கல்லில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.