சென்னை: அரசியல்வாதிபோல மதுரைஆதீனம் பேசுவதை அறநிலையத்துறை அனுமதிக்காது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத் துறை நிச்சயம் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். சென்னை ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட சத்தியவாணி முத்து நகரில் உள்ள 178 குடும்பங்களை புளியந்தோப்பு கே.பி. பூங்கா குடியிருப்புக்கு மறுகுடியமர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில், தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: பக்தர்கள், அர்ச்சகர்கள், பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் என அனைவரும் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்பதுதான் முதல்வரின் வழிகாட்டுதல். சமத்துவம், சமதர்மம் என்றசொற்களுக்கு ஏற்ற வகையில்தான் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில், பொது கோயில் என்றுதான் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பொது கோயில்களில் இருந்து புகார்கள் வரும்போது இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி ஆய்வு செய்து விசாரிக்கலாம்.
சிதம்பரம் கோயில் குறித்து எழுந்த புகார்கள் குறித்து, சட்டப்படி ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றனர். எந்த பயமும் இல்லை என்றால் ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை.
ஆய்வு செய்வது தீட்சிதர்களுக்கு எதிரான செயல் என்றுநினைக்கக் கூடாது. சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்ளும்எண்ணம் எதுவும் அறநிலைத்துறைக்கு இல்லை.
சட்டத்தை மீறி எந்தவிதமான செயலிலும் ஈடுபட மாட்டோம். புகாரின் அடிப்படையில் அறநிலைத்துறை நிச்சயம் ஆய்வு மேற்கொள்ளும். தீட்சிதர்கள், அதிகாரிகளை ஆய்வுக்கு அனுமதிக்காதது குறித்துசட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மதுரை ஆதீனம் அரசியல்வாதிபோல பேசிக் கொண்டிருப்பதை அறநிலைத் துறை அனுமதிக்காது. முதல்வரின் வழிகாட்டுதலால் பொறுமையாக இருக்கிறோம். நாங்கள் பதுங்கி இருப்பதை பயமாக கருதக் கூடாது. எங்களுக்கும் பாயத் தெரியும்.
தமிழை வளர்க்கும் ஆட்சி
ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் முயற்சி செய்கிறார். ஆதீனங்கள் சைவத்தை சார்ந்தவர்கள்.
சைவம்என்றாலே தமிழ். தமிழை வளர்க்கும் ஆட்சி மு.க.ஸ்டாலின் ஆட்சி.மதுரை ஆதீனம் தொடர்ந்து இதுபோல பேசினால், பதில் சொல்ல பல வகைகள் இருக்கின்றன என்பதை அடக்கத்தோடு சொல்கிறேன்.