இல்லம் தேடி கல்வி திட்டம் என்ற புதிய சித்தாந்ததை முதல்வர் உருவாக்கியுள்ளார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘இல்லம் தேடி கல்வி திட்டம் என்ற புதிய சித்தாந்தத்தை முதல்வர் உருவாக்கி உள்ளார். யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு நல்லதே செய்கின்றனர். அவற்றை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டியது மக்களுடைய கடமை. இவற்றையும் மீறி பலபேர் பள்ளிக்கு செல்வதில்லை. 7,8 வயதுடைய குழந்தைகள் தெருக்களில் தேநீர் கடையில் கிளாஸ் கழுவுவதை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட பிள்ளைகளை தெருவில் நிறுத்தி உட்கார வைத்து பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்கிற ஒரு திட்டம் தான் இல்லம் தேடி கல்வி திட்டம்.
இந்த திட்டத்தால் பயனடைபவர்கள் மாணவர்கள் தான். இவற்றில் நாட்டமுடையவர்கள், பொது நலனில் அக்கறையுடை யவர்கள் குறைந்த ஊதியத்தில் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என வருகிறார்கள்.
எனது காட்பாடி தொகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபங்களால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. காட்பாடி பகுதியில் எனக்கே தெரியாமல் புதிதாக ஒரு திரையரங்கம் முளைத்திருக்கிறது. ஏற்கெனவே அந்த பகுதியில் வாகன நெரிசல் இருக்கக் கூடிய நிலையில் மேலும் இதுபோன்று ஒரு திரையரங்கம் வருவதால் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட கூடிய வாய்ப்புள்ளது. அந்த திரையரங்கத்துக்கு எதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தீர்கள் என்பது போன்ற முழு விவரத்தை எனக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.