புதிய அரசு பணியில் சேர்பவர்கள், பதவிக்காக காதிருப்போர், அரசு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வது தவிர்க்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும். வேலை நிறுத்த போராட்டத்தை வீடு பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் முன்னுரிமை வழங்கப்படும். போராட்டக் காலத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும்.
கணக்கு கருவூல பணிகளில் இருப்பவர்களுக்கு துரிதமாக பணிகள் மேற்கொள்ள மாவட்ட அளவில் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்படும். புதிய அரசு பணியில் சேர்பவர்கள், பதவிக்காக காதிருப்போர், அரசு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்களுடைய பணிநியமனம் செய்யப்படும் என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை படிப்படியாக இந்த அரசு நிறைவேற்றும் என்று கூறிய ஸ்டாலின், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நிதி நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி மாதம் முதலே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022 முதல் வழங்கப்படவிருந்த அகவிலைப்படி மூன்று மாதம் முன்கூட்டியே வழங்கப்படுவதால், அரசுக்கு கூடுதலாக 1,620 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும், வருடத்திற்கு 6 ஆயிரத்து 480 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.