அமெரிக்காவில் கரோனா தீவிரமாக பரவும் நிலையில், 5 வாரங்களில் நிலைமை சீரடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், டுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே ஒமைக்ரான் அதிகளவில் பாதித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவி வருகிறது. முந்தைய டெல்டா வைரஸ் குறைந்து இதன் பரவல் மேலோங்கி வருகிறது என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் சற்றே மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கூட, முற்றிலுமாகவே இந்த வைரஸை மிதமானது என்று வகைப்படுத்திவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் இரண்டு வாரம் அதன் உச்சத்தைக் காட்டிவிட்டு பின் குறைந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவில் கரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,025 பேர் பலியாகியுள்ளனர். மேலும், அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவலும் வேகமெடுத்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் விடுமுறை தாக்கம்: அமெரிக்காவில் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் பல நிறுவனங்களில் ஊழியர்கள் விடுப்பு எடுத்துவிட்டதாகவும், இதனால் பணியாளர்கள் பற்றாகுறை நிலவுவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ஒமைக்ரான் அதி தீவிர பரவல் காரணமாக அமெரிக்காவில் வரும் நாட்களில் 50,0000 லட்சம் பேர் வீட்டில் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற வாய்ப்பிருப்பதாக அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை விளைவாகவே இந்த அளவு தொற்று பரவி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து வாரங்களில் அமெரிக்காவில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே ஒமைக்ரான் அதிகளவில் பாதித்துள்ளது என்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.