பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுரவ் கங்குலி 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகச் செலுத்தியவர். இருந்தாலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடர்ந்து பயணம் செய்துவருவதால் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம்.
கங்குலிக்கு லேசான கரோனா அறிகுறிகள் இருந்தவுடன் உடனடியாக நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முன்னெச்சரிக்கையாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ கங்குலிக்கு நேற்று இரவு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும்நிலையில் தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் லேசான நெஞ்சுவலி காரணமாக கங்குலி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சவுரவ் கங்குலியின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது. அவருக்கு கரோனா வைரஸ் தொற்றா அல்லது ஒமைக்ரான் தொற்றா எனக் கண்டறிய அனுப்பப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24ம் தேதி கொல்கத்தாவில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி பங்கேற்றுள்ளார் அங்கு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி, பபுல் சுப்ரியா, நுஸ்ரத் ஜகான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.