விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படமும், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படமும் ஒரே நாளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் ‘வாரிசு’ உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், “வாரிசு 7 நாட்களில் ரூ.210 கோடி வசூலிப்பதற்கான சாத்தியம் மிக குறைவு. ரசிகர்களின் திருப்திக்காக இப்படியான நிலவரங்கள் வெளியிடப்படுகின்றன.
இது கதாநாயகர்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்துவதற்குதான் பயன்படுகிறது. தன்னுடைய படம் இத்தனை கோடியை வசூலித்தால், அடுத்த படத்திற்கு அதிக ஊதியத்தை கேட்கலாம் என ஒரு ஹீரோவின் ஊதிய வளர்ச்சிக்கே இப்படியான வசூல் நிலவரங்கள் பயன்படுகின்றன. மேலும், ரசிகர்களின் மோதலுக்கும் இது வழிவகுக்கிறது. அப்படியே வசூலை பதிவு செய்பவர்கள், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் வசூலை குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். உண்மையான ரிப்போர்ட் யாருக்குமே தெரியாது. தமிழ்நாட்டில் ‘வாரிசு’ படத்தை வெளியிடும் லலித்துக்கு தமிழ்நாடு ரிப்போர்ட் தெரியவரலாம். மற்ற இடங்களில் ரிப்போர்ட் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.
அந்தந்த மாநிலங்களில் படம் விற்றுவிட்டால் ரிப்போர்டை யாரும் அனுப்ப மாட்டார்கள். மினிமம் கியாரண்டி முறையில் வாங்கியிருந்தால் மட்டுமே ரிப்போர்ட் கொடுப்பார்கள். ஒரு படத்தை மொத்த விலைக்கு விற்றுவிட்டால் எந்த ரிப்போர்டும் வராது. அப்படி ஓவர்சிஸில் பார்க்கும்போது அங்கே மினிமன் கேரண்டியெல்லாம் இல்லை. மொத்த விலைக்கே விற்றுவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு எந்த ரிப்போர்டும் வராது. பிறகு எப்படி ஓவர்சிஸ் ரிப்போர்டை இவர்கள் கொடுக்க முடியும்?
தயாரிப்பாளர்களே ரசிகர் மன்றத்தினர் அளவிற்கு தரம் குறைந்துவிட்டனர். இந்த வசூல் உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு. அப்படியே இருந்தாலும், அது மொத்த வசூலா, நிகரவசூலா, வரி சேர்த்தா, வரியில்லாமலா என்ற எந்த தரவும் இல்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு படத்திற்கு 26 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இவர்கள் சொல்வது போல ரூ.200 கோடி வசூல் என எடுத்துக்கொண்டால் ரூ.52 கோடி வரி கட்ட வேண்டும். உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு படம் ரூ.4 கோடி வசூலிக்கிறது என்றால், அதில் 1.15 கோடி வரிக்கு சென்றுவிடும். மீதி திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒன்றரைக்கோடி சென்றுவிடும். மீதி பணம் தான் இவர்களுக்கு வரும். ஆனால், இவர்கள் அனைத்து வசூலும் தங்களுக்கே கிடைப்போது போல மொத்த வசூலையும் வெளியிடுகின்றனர். இதை வைத்து நடிகர்கள் தங்களின் ஊதியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு படங்களும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன. நேற்றும், இன்றும் சற்று மந்தமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. நாளையிலிருந்து மீண்டும் பழையபடி திரும்பிவிடும். இரண்டு படத்திற்கும் 5 சதவீதம் தான் வித்தியாசமே தவிர, வசூலில் பெரிய அளவில் வித்தியாசமுமில்லை. வசூலில் மாற்றம் என்பது ஒரு நாள் ஒரு படத்திற்கு ஒரு காட்சி அதிகரித்திருக்கும். மற்றொரு படத்திற்கு குறைந்திருக்கும். அதன் அடிப்படையில் தான் வசூலில் மாற்றம் நிகழ்கிறது. பெரிய வித்தியாசமில்லை. இரண்டு படங்களும் ஒன்றாக வந்துள்ளதால் 25 சதவீதம் இரண்டு படங்களுக்கும் பாதிப்புள்ளது. தனித்தனியாக வந்திருந்தால் இன்னும் கூடுதல் வசூல் கிடைத்திருக்கும்” என்றார்.
இரண்டு படங்களின் தமிழ்நாடு வசூல் குறித்து பேசிய திரைப்பட வர்த்தகர் ஒருவர், “இரண்டு படங்களும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ‘துணிவு’ படத்திற்கான திரைகள் அதிகமாக இருப்பதால் அதன் வசூல் சற்று உயர்ந்துள்ளது. விடுமுறை நாட்களில் ‘வாரிசு’ படத்தின் கை ஓங்கியது. பின்னர் ‘துணிவு’ படம் ‘வாரிசு’ படத்தை விட சற்று கூடுதலாக வசூலில் முன்னேற்றத்தில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ‘துணிவு’ ரூ.90-95 என்றால், ‘வாரிசு’ ரூ.85-90 என ரூ.5 கோடி முன்னும் பின்னுமாக வசூலித்து வருகிறது” என்றார்.