திருச்சி: “தமிழத்தில் சிறப்பு முகாம் என்ற சித்ரவைதை முகாம்களை மூடுங்கள், க்யூ பிரிவை கலைத்து விடுங்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பேரறிவாளன் விடுதலையை யார் கொண்டாடியது? கொண்டாடியிருந்தால் என் தம்பி விடுதலையை நான்தான் கொண்டாடியிருக்க வேண்டும். பேரறிவாளன் நிரபாரதி இல்லை என்று கூறும் அண்ணாமலை, அமித் ஷாவுக்கும், மோடிக்கும் குஜராத் கலவரத்தில் தொடர்பு இல்லை என்று இந்த நாட்டின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எப்படி பார்க்கிறார்?
ஒரு மாநிலத்தின் முதல்வர், சட்டம் – ஒழுங்கை கையில் வைத்திருக்கக் கூடியவர், அவருக்கு தெரியாமல், ஒரு மாதத்துக்கும் மேலாக கலவரம் நடந்திடுமா? வயிற்றைக் கீறி குழந்தையைத் தூக்கி நெருப்பில் வீசுவது எல்லாம் சாத்தியப்பட்டுவிடுமா? பல ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை கொன்று குவித்தது, மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தெரியாமலேயே நடந்துவிட்டதா? இவர்களை விடுதலை செய்தால் நிரபராதி, பேரறிவாளனை விடுதலை செய்தால் அவர் குற்றவாளியா?
தமிழகத்தில் க்யூ பிரிவென்று ஒன்றும், சிறப்பு முகாமென்று ஒன்றும் உருவாக்கப்பட்டதே ஈழத் தமிழர்களுக்காகத்தான். அதை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். அவர் உருவாக்கியதை நீங்களாவது முடிவுக்கொண்டு வாருங்கள் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டு பார்த்தோம். அது நடக்கவில்லை. தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் இதைத்தான் கேட்கிறோம், ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்ய வேண்டாம். முதலில் இந்த சிறப்பு முகாம் என்ற சித்ரவைதை முகாம்களை மூடுங்கள், க்யூ பிரிவை கலைத்து விடுங்கள். தமிழக முதல்வருக்கு தற்போதும் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். சிங்களர்கள் சிறையில் அடைபட்டு வதைபடுவதற்கு இணையாக தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் வதைபடுகின்றனர்.
மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளாகிவிட்டது, உங்களோடு நான் இவ்வளவு நேரம் நின்று பேசுவதைப் போல், ஒரு தடவை பிரதமரை ஊடகவியலாளர்களை சந்திக்க சொல்லுங்கள்.நாட்டில் நடைபெறும் வளங்களின் கொள்ளை குறித்து பாஜக காங்கிரஸ், திராவிட கட்சிகள் கண்டித்ததே இல்லை, அவர்கள்தான் விற்கின்றனர்” என்று அவர் கூறினார்.