எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணியை அற்புதமான கூட்டணி அமைத்து வீழ்த்தியுள்ளது, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி. அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் பெற்ற வலுவான முன்னிலை காரணமாக இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை வெற்றிக்கான இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
இந்த மைதானத்தில் இது மிகவும் சவாலான இலக்காக பார்க்கப்பட்டது. ஆனாலும் இங்கிலாந்து அணி மிகவும் பாசிட்டிவாக இலக்கை விரட்ட தொடங்கியது. அதற்கு போதுமான நேரமும் அந்த அணிக்கு இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் 107 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் அடுத்த 2 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி.
அதன் பிறகு அனுபவ வீரர்கள் ரூட் மற்றும் பேர்ஸ்டோ 269 ரன்களுக்கு வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றியை வசமாக்கியது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தை 7 விக்கெட்டுகள் கைப்பற்றினால் வெற்றி என்ற கணக்கில் இந்திய அணி விளையாட தொடங்கியது. மறுபக்கம் இங்கிலாந்து அணி வெறும் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. அந்த ரன்களை தாமதிக்காமல், மேற்கொண்டு ஒரு விக்கெட்டை கூட விட்டுக் கொடுக்காமல் இலக்கை வெற்றிகரமாக விரட்டியது இங்கிலாந்து. அது இங்கிலாந்து அணிக்கு சிந்தாமல் சிதறாமல் வெற்றியை உறுதி செய்தது. ரூட் மற்றும் பேர்ஸ்டோ என இருவரும் சதம் விளாசி இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றி பறிபோய்விட்டது.
இப்போது ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 2-2 என சமானில் நிறைவு அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொடரின் முதல் நான்கு போட்டிகள் நடந்தன. கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடைசி போட்டி இப்போது நடந்தது.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
- இங்கிலாந்து அணியின் கடைசி இன்னிங்ஸில் பேர்ஸ்டோ கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர் விஹாரி நழுவவிட்டார். அது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணம். ஆனால், அதுவே பிரதான காரணம் என சொல்ல முடியாது.
- கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் இதில் விளையாட முடியவில்லை.
- மறுபக்கம் இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிரதான பேட்ஸ்மேனான கோலி ரன் சேர்க்க தடுமாறினார்.
- இளம் வீரர்களான கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் எதிர்பார்த்த அளவுக்கு இந்தப் போட்டியில் சோபிக்கவில்லை.
- குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் லூஸ் ஷாட் ஆடி இருந்தனர். அதனால் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடைசி வரை அதை செய்யவில்லை என்றும் சொல்லலாம்.
- இந்தப் போட்டியின் முதல் மூன்று நாட்கள் முழுவதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், கடைசி இரண்டு நாட்களில் அது அப்படியே மாறி இருந்தது.
- இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் கடந்த புஜாராவும், பந்தும் பெரிய ரன்களை அடிக்க தவறியதும் அணியின் தோல்விக்கு காரணம்.
- பும்ராவை தவிர பிற பவுலர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- மொத்தத்தில் இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாடம் சொல்லித் தரும் வகையில் அமைந்திருந்தது இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்.