ஆரோக்கியமும், சுகாதாரமும் மக்கள் முன்னேற்றத்தின் அடித்தளம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். சர்வதேச அளவில் சுகாதாரப் பொருட்களுக்காக அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ‘ரெக்கிட்’ நிறுவனம், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் டெட்டால் பள்ளி நலக் கல்வித் திட்டத்தை கிராமாலயா நிறுவனத்துடன் இணைந்து நேற்று தொடங்கியது. இத்திட்டம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் உள்ள 3 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார நலக் கல்வி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழா, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நேற்று நடந்தது. வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவை மக்கள் முன்னேற்றத்தின் அடித்தளம். உடல் நலமும், நல்ல சுகாதாரப் பழக்கங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. டெட்டாலின் இந்த முயற்சியானது, தமிழகத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளிடமும், சமுதாயத்திடமும் நல்லதொரு சுகாதார மாற்றத்தை ஏற்படுத்தும்.
சிற்றுண்டி திட்டம் – ‘ரெக்கிட்’ நிறுவனம் தொடங்கி உள்ள டெட்டால் பள்ளி நலக் கல்வித் திட்டம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 3 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி குன்றி பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதுபோன்ற குறைபாடு இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்குதான் காலை சிற்றுண்டி திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பசியோடு வரக்கூடிய குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை காலை சிற்றுண்டி திட்டம் வழங்குகிறது. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதுதான் தமிழக அரசின் முதன்மை நோக்கம். இவ்வாறு அவர் பேசினார். ரெக்கிட் நிறுவனத்தின் தெற்காசிய வெளி விவகார மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்நாகர் பேசுகையில், ‘‘தமிழக அரசுடன் இணைந்து குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே டெட்டால் பள்ளி சுகாதாரக் கல்வித் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
அதனால், வருங்கால தலைவர்களான மாணவர்களிடம் இத்திட்டத்தின் மூலம் சுகாதார விழிப்புணர்வை தொடங்கி இருக்கிறது என்றார். கிராமாலயாவின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் எஸ்.தாமோதரன் பேசுகையில், ‘‘உடல், மனம், சமூகம் ஆகிய அனைத்தும் நலமாயிருப்பதற்கு தனி நபர் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவசியம். முறையான சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பதால் நோய் பரவாமலும், நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கலாம். ஒவ்வொரு மனிதனும் தன்னையும், தன்னைச் சுற்றியும் சுகாதாரமாக வைத்துக் கொண்டால் பரவக்கூடிய நோய்கள் பெரிய அளவில் தடுக்கப்படும் என்றார். ஆட்சியர் அனீஷ் சேகர், பூமிநாதன் எம்எல்ஏ, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, பிளான் இந்தியா தேசிய திட்ட மேலாளர் குமார் சுக்லா மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.