சென்னை கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. எனினும் அவற்றின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ள நிலையில், போதிய அளவு விற்பனை ஆகவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கனமழைக்கு முன்பு சராசரியாக 5,000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்தன.
மழை பாதிப்பால் வரத்து குறைந்து, காய்கறிகள் விலை உயர்ந்த நிலையில், தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 7,000 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
இதனால், வெங்காயம் அதிகபட்சம் 25 ரூபாய் வரையும், தக்காளி கிலோ 10 ரூபாய் வரையும், கத்தரிக்காய் ரகங்கள் 15 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல், அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறைந்துள்ளன.
திருப்பூரில் 40 ரூபாய் வரை விற்கப்பட்ட வெண்டைக்காயை, தற்போது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதையும் வாங்க ஆள் இல்லாததால், கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பறிப்பு கூலிக்கு கூட வெண்டைக்காய் விலை போகாததால், அப்படியே செடியுடன் மாடுகளை மேய விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் சந்தைக்கு நாளொன்றுக்கு 50 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வருவதால், ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு பெட்டி, தற்போது 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடும் பொருளாதார இழப்பு காரணமாக சில விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். மேலும், சந்தைக்கு கொண்டுவரும் தக்காளிகளை வாங்க ஆள் இல்லாததால் சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
சேலம் மாவட்டத்திலும் தக்காளி விளைச்சல் அதிகரித்து, தலைவாசல் காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.