மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்த பின், ஓய்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் இந்தியா வெளியேறியுள்ளது. இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு இது கடைசி உலகக்கோப்பை ஆகும். 39 வயதாகும் அவர் இதுவரை மொத்தம் ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடிய ஒரே மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த உலகக் கோப்பை கடைசி என்பதால் தொடர் முடிந்ததும் அவரின் ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில் அது தொடர்பாக பேசிய மிதாலி, “கிட்டத்தட்ட ஒரு வருடம் தயாராகி வந்த உலகக் கோப்பையில் இதுபோன்ற தோல்வியை சந்தித்தால், அதை ஏற்றுக்கொள்ள நேரம் எடுக்கும். எனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும், இன்று போட்டியில் என்ன நடந்தது என்பதைச் சிந்திக்கவும் நீங்கள் எனக்கு ஒரு மணிநேரம் கூட கொடுக்கவில்லை. எனது எதிர்காலம் குறித்து உண்மையிலேயே நான் சிந்திக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால், அதைப் பற்றி சிந்திக்கும் நிலையிலும் நான் இல்லை. தோல்வியால் ஏற்பட்ட உணர்ச்சிகள் இன்னும் எங்களைவிட்டு அகலவில்லை. எனவே இப்போது எனது எதிர்காலத்தைப் பற்றி நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது. தென்னாப்பிரிக்க போட்டியில் என்ன நடந்தது என்பதை ஆலோசிக்கவே இப்போது திட்டமிட்டுள்ளேன்” என்று விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, இந்திய அணியின் சீனியர் பவுலர் ஜூலன் கோஸ்வாமிக்கும் இது கடைசி உலகக்கோப்பை போட்டிதான். கடைசி லீக்கில் காயம் காரணமாக ஜூலன் கோஸ்வாமி விளையாட முடியவில்லை. இதனால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.