கடுமையான அரசியல் சூழலால் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் கடந்த ஜூலை 7ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதன் பிறகு பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த இங்கிலாந்து பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். கடந்த வாரம் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதில் நிதி அமைச்சரான ரிஷி சுனக்கும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில், ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார் எனச் செய்தி வெளியாகியுள்ளது.
ரிஷி சுனக், தான் பிரதமரானால், “நிதி நிலைமையைச் சரியாக்க, வரிகளைக் குறைத்து, முன்னால் பிரதமர் மார்கரெட் தாட்சர் போல ஆட்சி நடத்துவேன்” எனக் கூறினார்.
வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இங்கிலாந்து பிரதமர் ஆனாலும், இங்கிலாந்தின் பொருளாதாரம், பண வீக்கம், அதிக கடன் பிரச்சனை போன்ற பெரும் சிக்கல்கள் உள்ளதால், அடுத்த பிரதமருக்கு பெரும் சவால்கள் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
900 பேர் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தலில், பென்னி மோர்டான்ட் என்பவர் தான் கட்சியினருக்கு பிடித்தமானவராக உள்ளார் என்கிறது மற்றொரு தரப்பு. பிரதமருக்கான போட்டியில், இவர்களைத் தவிர, லிஸ் டிரஸ், கெமி படேனோச், டாம் துகென்தாட் உள்ளிட்டோர் உள்ளனர். இதில் லிஸ் டிரஸ் போரிஸ் ஜான்சனின் விசுவாசியாகப் பார்க்கப்படுகிறார்.