சென்னை: கடந்த 07.05.2021 முதல் 21.03.2022 வரை 10,92,064 புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 01.04.2017 முதல் அனைத்து ஸ்மார்ட் குடும்ப அட்டைகளும் ஆதார் எண் பதிவு அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் கூட்டுறவு மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள்: முழு கணினிமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி அனைத்து இன்றியமையாப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. 07.05.2021 முதல் 21.03.2022 வரை 10,92,064 புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 01.04.2017 முதல் அனைத்து ஸ்மார்ட் குடும்ப அட்டைகளும் ஆதார் எண் பதிவு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதார் அட்டை எடுக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை இல்லாமல் அவர்களது பெயரைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் தேவை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் 5 வகையானஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன. 21.02.2022 நிலவரப்படி பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை விவரங்கள்:

முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) – 91,88396

முன்னுரிமை குடும்ப அட்டைகள் – அந்தியோதயா அன்ன யோஜனா (PHH AAY) 18,64,201

முன்னுரிமை குடும்ப அட்டைகள் (OAP/ANP)(PHH)- 3,73,197

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH)
1,02,63,338

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் – சர்க்கரை (NPHH S) – 3,83,756

> முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள்-எப்பொருளும் இல்லாதவை (NPHH NC) 53,146 என மொத்தம் 2 கோடியே 21 லட்சத்து 31 ஆயிரத்து 32 குடும்ப அட்டைகள் உள்ளன.