பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மிக அதிக அளவில் பங்கு வெளியீட்டில் ஈடுபட்டுள்ளது.
பங்கு வெளியீடு மூலம் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 98 சதவீத அளவுக்கு பங்குகளுக்கு முன்பதிவு வந்துள்ளது. பங்குச் சந்தை விடுமுறை நாளான சனிக்கிழமையும் கூடுதலாக எல்ஐசி பங்கு முதலீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகளில் இம்மாதம் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பங்குகள் வரும் 17-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
மொத்தம் 16.20 கோடி பங்குகளில் 13.17 கோடி பங்குகளில் பொது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். எஞ்சியவை பாலிசிதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலிசிதாரர்களுக்கான ஒதுக்கீட்டு அளவைவிட 2.47 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதேபோல பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டு அளவைவிட 1.63 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. சிறுமுதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டு அளவு 0.75 மடங்கு அதிகம் வந்துள்ளது.
நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் அளவு 0.32 மடங்கு அதிகம் வந்துள்ளது. தகுதி படைத்த நிறுவனங்கள் வாங்கும் அளவு 0.34 மடங்கு அதிகம் வந்துள்ளது. பங்கு விலை ரூ.902 முதல் ரூ.949 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள், பாலிசிதாரர்களுக்கு விலை சலுகையும் அளிக்கப்பட உள்ளது.