மாநகர போக்குவரத்து கழகத்தில் தேசிய பொது இயக்க அட்டை செயல்படுத்தப்படும் என்று தமிழக போக்குவரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசானது கடந்த 2020-ம் ஆண்டு என்.சி.எம்.சி., எனப்படும் தேசிய பொது இயக்க அட்டையை அமல்படுத்தியது. இந்த அட்டையை, மெட்ரோ ரயில் பயணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பஸ் பயணம், சுங்கச்சாவடி கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் செலுத்தவும் பயன்படுத்த முடியும். மேலும், கடைகளில் பொருட்கள் வாங்கவும், ஏ.டி.எம்.-மில் பணம் எடுக்கவும், இந்த அட்டையை பயன்படுத்தும் வசதியும் உள்ளது.
இந்நிலையில், இது போன்ற சேவை சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில், ‘தேசிய பொது இயக்க அட்டையில் சேமிக்கப்பட்ட தொகை, குறைந்த நிதி அபாயத்துடன் அனைத்து பயணத் தேவைகளிலும் இணைய பயன்பாடு இன்றி பரிவர்த்தனை மேற்கொள்ள உதவுகிறது. ஜெர்மன் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்படவும், மாநகர போக்குவரத்து கழகத்தில் தேசிய பொது இயக்க அட்டை செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.