மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், “தமிழகத்தின் சார்பில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (நவ.25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தென்னிந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசத்திற்கு அப்பாற்பட்டு கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும், மாநிலங்களின் நிதி உரிமைகள் குறைந்துகொண்டே வருகிறது. இதனை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
மத்திய அரசு நிதியளிக்கும் திட்டங்கள், நிதி விகிதாச்சாரம், உள்பட பல வகையினங்கள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மாநிலத்தின் நிதி ஆதாரங்களையும், அதிகாரத்தையும் திரும்ப நிலைநாட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் இருந்தது போன்று மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தனர். அது எனக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. குறிப்பாக மகராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உத்ரகாண்ட் போன்ற பாஜகவுக்கு செல்வாக்கு அதிகமுள்ள மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.
இரண்டாவதாக, உலகளவில் பொருளாதார நெருக்கடி வரவிருக்கின்ற சூழ்நிலையில், மாநிலத்தின் கடன் எல்லைகளையும், ஜிஎஸ்டி நிவாரணத் தொகையையும் உதவிடும் வகையில் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது, ஜிஎஸ்டி நிவாரணத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 15-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2200 கோடி மானியம் இன்னும் அளிக்கப்படவில்லை. அதேபோல், சென்னையில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்காக ரூ.500 கோடி பரிந்துரை செய்யப்பட்டது. அதுவும் வரவில்லை. எனவே, அவற்றை வழங்க வேண்டும். அதுபோல் பிஎல்ஐ திட்டம், தோல் மற்றும் தோல் இல்லா காலணிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையினை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை மெட்ரோவைப் பொறுத்தவரை, இதுவரை மாநில அரசு மட்டும் முதலீடு செய்து மாநில அரசின் திட்டமாகத்தான் நடத்தி வந்தோம். மத்திய அரசு தரவேண்டிய 50 சதவீத முதலீடுகளை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்படாமல் இருக்கும் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதிகள் அளிக்க வேண்டும். இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.