நீட் விலக்கு சட்டத்திற்கான குடியரசுத் தலைவர் ஒப்புதலை 3 மாதங்களில் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவை 86 நாட்கள் ஆய்வுக்குப் பின் மத்திய அரசுக்கு ஆளுனர் அனுப்பி வைத்துள்ளார். இதை எண்ணி ஆறுதல் பட முடிகிறதே தவிர, மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்கு காரணம் நாம் இன்னும் முழு கிணற்றை தாண்டவில்லை.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதை 142 நாட்கள் ஆய்வுக்குப் பிறகு பிப்ரவரி ஒன்றாம் தேதி அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து மார்ச் 8-ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட முன்வரைவைத் தான் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும்.

ஆனால், நீட் விலக்கு சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது அவ்வளவு எளிதானது அல்ல. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு அதிகபட்சமாக ஒரு வாரத்தில் ஆளுநர் மாளிகை வழியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல் முறை நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பப்பட்டது, அதன்பின் மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு 86 நாட்கள் கழித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கான மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என மொத்தம் 234 நாட்களை இதற்காக செலவழிக்க வேண்டியிருந்தது.