நாட்டின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளராக விளங்குபவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. பங்குச்சந்தை முதலீடு மூலம் பெரும் கோடீஸ்வரான இவர், ஆகாசா ஏர் விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இந்த முயற்சியின் முக்கிய நகர்வாக ஆகாசா ஏர் நிறுவனம் தனது சேவையை தொடங்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஆகாசா ஏர் நிறுவனத்தின் சிஇஓ வினய் தூபே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகாசா ஏர் தனது சேவையை தொடங்க AOC சான்று கிடைத்துள்ளது. இதற்காக உதவி செய்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றுக்கு நன்றி. வரும் இம்மாத இறுதியில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றுள்ளார்.

உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்கி ஆகாசா ஏர் ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல் கட்டமாக 18 விமானங்களையும் மொத்தம் 72 விமானங்களையும் வாங்க ஆகாசா ஏர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

 

கோவிட் கால முடக்கத்திற்கு பின் உலகில் விமான போக்குவரத்து சேவை மீண்டும் இயல்பாக இயங்கத் தொடங்கிய நிலையில், குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் ஆகாசா ஏர் நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அதிகளவில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில், வினய் தூபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.