நேபாள நாட்டுப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்நாடு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளது.

நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை இமயமலையை ஒட்டி சுமார் 1,400 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைந்துள்ளது. இந்நிலையில், சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக புகார் கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த நேபாள அரசின் குற்றச்சாட்டு குறித்த அறிக்கை பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் கிடைத்துள்ளது.

மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. நேபாள நாடு தயாரித்த இந்த அறிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகியுள்ளது.

ஹூம்லா பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு 9 கட்டிடங்களை எழுப்பியுள்ளதாக நேபாளம் புகார் கூறியுள்ளது. இதுதொடர்பாக நேபாள அரசின் மாவட்ட தலைமை அதிகாரி தலைமையிலான குழு நேரடியாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதுகுறித்து நேபாள நாட்டின் தகவல், தொலைதொடர்புத்துறை அமைச்சர் கியானேந்திர பகதூர் கார்கி கூறும்போது, “அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையானது, அரசியல் ரீதியில் தீர்க்கப்படும். இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ இருக்கும் எல்லைப் பிரச்சினைகளை நாங்கள் அரசியல்ரீதியாக தீர்க்கவே விரும்புகிறோம். இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடாது. ஆனால்,இதுபோன்ற சூழ்நிலைகள் வரும்போது அதைத் தடுக்க நேபாள அரசு எப்போதும் முயற்சிகளை மேற்கொள்ளும்” என்றார்.

ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.