சென்னை: தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில், ரூ.3.41 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக கொடுக்கப்படும் என்று இந்த நிறுவனத்தின் பெயரிலான விளம்பரம் சமூக ஊடகங்களில் சமீபத்தில் பரவியது.

இதுதொடர்பாக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் அமைந்தகரை, திருமங்கலம், வில்லிவாக்கம், வேலூர் மாவட்டம் காட்பாடி, ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர், செய்யாறு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

வந்தவாசி அடுத்த விளாங்காடு கிராமத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகியான ராஜசேகரின் தாய் செல்வி, உறவினர் மணிகண்டனின் வீடுகளில் சோதனை நடந்து. மணிகண்டனின் வீட்டில் இருந்து 39 பவுன் நகை, ரூ.24.65 லட்சம், 654 கிராம் வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 48 கணினி ஹார்டு டிஸ்க், 6 லேப்டாப், 44 செல்போன், 60 பவுன் தங்கம், 2 கார், ரூ.3.41 கோடி கைப்பற்றப்பட்டுள்ளன. 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸார் கூறினர்.

ஆருத்ரா நிறுவனம் மறுப்பு

முதலீடு தொடர்பாக வெளியான தகவலுக்கு ஆருத்ரா நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் வழக்கறிஞர் நரேஷ், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி என்பது போன்ற திட்டம் எங்கள் நிறுவனத்தில் இல்லை. அந்த விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை. எங்கள் பெயரை பயன்படுத்தி யாரோ மோசடி செய்கின்றனர். ஆவணங்களின் ஆய்வுக்காகவே போலீஸார் வந்தனர். எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் யாரும் ஏமாறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.