ஈரானில் ஹிஜாப்க்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா குரல் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரான் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி ஆதரவு குரல் எழுப்புகிறார்கள். ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்பதற்காக மிகவும் கொடூரமான முறையில் ஈரானிய போலீஸாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட மாஷா அமினிக்காக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. பல யுக கட்டாய மௌனத்திற்குப் பிறகு இந்த குரல்கள் எரிமலையாக வெடித்து சிதறுகின்றன. இதனை தடுக்க முடியாது. உங்கள் தைரியத்தை கண்டு நான் வியப்படைகிறேன். ஆணாதிக்கத்துக்கு எதிராக சவால்விட்டு உங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதும் உங்கள் உயிரைப் பணயம் வைப்பதும் எளிதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். ஹிஜாப்புக்கு எதிரான பெரும் போராட்டம் ஈரானில் முன்னெடுக்கப்பட மாஷாவின் மரணம் காரணமாகியுள்ளது.
இப்போராட்டங்களில் இதுவரை 70க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.