சென்னை: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்சை தளமாகக் கொண்டு செயல்படும் ஏஎப்டி வங்கியின் நிதியுதவியுடன் சென்னையில் உள்ள 231 மாநகராட்சிப் பள்ளிகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு நவீன தளவாடங்கள் மற்றும் சிறந்த கட்டிடங்கள் ஆகியவற்றுடன் அதிநவீன தோற்றத்துடன் காட்சியளிக்கும் வகையில் மேம்படுத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. சென்னைக்கு சமீபத்தில் வந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்சின் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கக்காட்சியில் 231 பள்ளிகளில் நவீன வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.1,432 கோடி நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது. நகரப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக மாற்றும் கட்டம்-3ன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் வகுப்புகள் மொழி ஆய்வகங்கள், ஸ்டெம் ஆய்வகங்கள், டேப்கள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மாற்றம், கால்பந்து மைதானம் மற்றும் உட்புற விளையாட்டு வசதிகள் போன்றவை இடம்பெறுகிறது.
மேலும் இதுதொடர்பாக இரண்டுநாள் பயணமாக வந்த இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் உகோ அஸ்டுடோ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரை சந்தித்து பேசினார் மேலும் இதுதொடர்பாக உகோ அஸ்டுடோ கூறுகையில், ‘சென்னை மாநகராட்சி ஏற்கனவே ரூ.95.2 கோடி மதிப்பிலான திட்டங்களை ஏஎப்டி வங்கி 28 பள்ளிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் வளமான மற்றும் ஈர்க்கக்கூடிய சூழலை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.சோதனைக் கற்றல் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் தர்க்கரீதியான சிந்தனை வளர்க்கப்படுகிறது,” என்று கூறினார்.