தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 24 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு நியூ ரைஸ் ஆலயம் சுமால் பைனான்ஸ் பேங்கிங் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 29 இடங்களில் கிளைகள் தொடங்கி தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக சந்திரா என்பவரின் புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் நிறுவன இயக்குனர்கள் 24 பேர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், “மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தில் 54 இயக்குனர்கள் உள்ளனர். ரூ.142 கோடி அளவில் மோசடி நடைபெற்றதாக 2700-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

விசாரணையில் ரூ.300 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. 64 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என்றார்.

 

 

இதையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.2 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய நிபந்தனை விதித்தார். இதை மனுதாரர்கள் ஏற்கவில்லை. பின்னர் முன்ஜாமீன் மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.