கேரளாவின் கொச்சியில் உள்ள கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாட்டின் கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி தற்போது ரூ.50 ஆயிரம் கோடியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இதனை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிலையான, தரமான, பல்வேறு வகையான மீன்களை பிடிப்பது, பிடித்த மீன்களை தேவையான இடங்களுக்குக் கொண்டு செல்வது, மீனவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முழமையாக செய்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலமே இதனை சாத்தியப்படுத்த முடியும் என தெரிவித்த பியூஷ் கோயல், இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.

இதேபோல், கடல் உணவுப் பொருட்களை புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த பியூஷ் கோயல், இதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள நமது தூதரகங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார்.

ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தடையற்ற ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பியூஷ் கோயல், இதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறினார்.

இத்தகைய ஒப்பந்தங்கள் இந்தியாவின் ஏற்றுமதிக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என்றும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.