கரோனா பரவல் உள்ள தற்போதைய சூழலில், வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் கைகொடுக்கின்றன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மாநிலம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல, சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் செய்ய 2 வாரம் அவகாசம் உள்ளது.
பிரதான எதிர்கட்சியான அதிமுக மற்றும் பாஜக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். தற்போதைய பிரச்சாரத்துக்கு சமூக வலைதளங்கள் மிகவும் உதவியாக உள்ளன. வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பிரசாரம் செய்கின்றனர்.
சமூக வலைதளத்தில் ஒரு தகவலை பதிவிட்டால் அவரது நட்பில் உள்ளவர்களும் அந்த கருத்தை பார்க்க முடியும். வேட்பாளர்களின் வாக்குறுதிகள் அடங்கிய தகவலை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டால், அக்குழுவில் உள்ள அனைவரும் பார்க்கவும், பகிரவும் முடியும். பெரும் சதவீத வாக்காளர்கள், தங்களது பொழுதுபோக்குக்காக சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒன்றை பின் தொடர்பவர்களாக உள்ளனர்.
எனவே, நேரடிப் பிரச்சாரம் மட்டுமின்றி, வாக்காளர்களை எளிதில் அணுக, சமூகவலைதள பிரச்சார யுக்தியையும், வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர். அதில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என காவல்துறையினரும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரிவினரும் கண்காணித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, அரசியல் நோக்கர்கள் கூறும்போது, ‘‘எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் ஒரு சிறு சம்பவமும், சமூகவலைதளங்கள் மூலம் கடைக்கோடி மக்களை சென்றடைகிறது. அரசியல் கட்சியினர் சார்பில் சமூகவலைதளங்களை நிர்வகிக்க பிரத்யேக அணியே உள்ளது. தங்களது பெயர், புகைப்படம்,கட்சியின் பெயர், சின்னம், தேர்தல் தேதி, எந்த வார்டு மற்றும் தேர்தல் வாக்குறுதி போன்றவற்றை குறிப்பிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய கரோனா பரவல் சூழலில், நேரடி தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில், சமூக வலைதளப் பிரச்சாரங்கள் வேட்பாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.