சென்னை கீழ்ப்பாக்கத்தில் அறநிலையத் துறை ஏற்று நடத்தும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் பள்ளியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 32 கிரவுண்ட் இடத்தில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் பள்ளி இயங்கி வந்தது. கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளையால் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாததால் பள்ளி இடம் கடந்த ஜூன் 13-ம் தேதி திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்டோர் பயில்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவர்களின் எதிர்காலம், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, இப்பள்ளியை இந்து சமய அறநிலையத் துறை ஏற்று நடத்த முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, ‘காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி’ என்று பெயர் மாற்றப்பட்டு, திருக்கோயில் நிர்வாகம் மூலம் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய 45 ஆசிரியர்கள், 12 பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்ததைவிட மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, தற்போது மொத்தம் 837 பேர் சேர்ந்துள்ளனர். பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் ரூ.27.84 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் வசதிக்காக ரூ.1 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பள்ளியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு சீருடை, புத்தகப் பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., தலைமைச் செயலர் இறையன்பு, சுற்றுலா துறை செயலர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.