சென்னை: தமிழக மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள் என்றும் அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி அறிந்து கொளவும், திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தொழில்களில் திறன் பயிற்சி பெற்றிட திறன் பயிற்சியளிக்கும் அரசுத் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் கடந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை அரங்குகளைத் திறந்து வைத்தார். மேலும் திறன் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சேர்க்கைச் சான்றிதழ்களையும், பணி நியமன ஆணைகளையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர்; நாட்டின் வளர்ச்சி இளைஞர்களை நம்பியே இருக்கிறது. இளைஞர்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். வேலை இல்லை என்ற நிலையும், வேலைக்கு தகுதியுள்ள இளைஞர்கள் இல்லை என்ற நிலையையும் மாற்ற முயற்சி எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டின் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்; அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த இளைஞர் திறன் திருவிழாவில் இளைஞர்களுக்கு திறன் குறித்த ஆலோசனைகளை வழங்க கலந்தாய்வுக் கூடங்கள், இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் துறைகளில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், பயிற்சி பிரிவுகள், வேலைவாய்ப்புகள் போன்ற தகவல்களை தொழில்துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கமளிக்க உள்ளார்கள். இளைஞர் திறன் திருவிழாவில் பங்கு கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களின் சுய விபரங்களைப் பதிவு செய்து கொள்ள திருவிழா இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர் திறன் திருவிழாவில் சுய உதவிக் குழு மகளிர் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சியானது 25 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.