டெல்லியில் வாழும்பல லட்சம் தமிழர் குடும்பங்களுக்காக ஏழு தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பள்ளிக்கல்வி முடித்த வர்களுக்கும் தமிழகத்திலிருந்து வருபவர்களின் உயர்க்கல்விக்காகவும் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுப்படிப்பு இங்கு உள்ளன. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர்கள் ஓய்வுபெற்று, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பிரபலக் கல்லூரியான லேடி ஸ்ரீராமில் பணியாற்றிய தமிழ்பேராசிரியர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றிருந்தார். மற்றொரு புகழ்பெற்ற மகளிர்கல்லூரியான மிராண்டா ஹவுஸிலும் 10 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேராசிரியர் ஓய்வு பெற்றார். இந்த 2 பணியிடங்களும் வேறு மொழிகளுக்கு மாற்றப்பட்டு விட்டதால் அவற்றின் தமிழ் பிரிவுகள் மூடப்பட்டு விட்டன. இது, மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதி மீறல் ஆகும். எனினும், இதன் மீது கேள்வி எழுப்ப எவருமின்றி தமிழ் மொழிக்கு தலைநகரில் விடிவில்லாமல் உள்ளது. குறிப்பாக டெல்லியில் பிரபலமான இந்த 2 மகளிர் கல்லூரிகளிலும் தமிழ் கல்வி பெறும் வாய்ப்பை பெண்களும் இழந்துள்ளனர்.
இதேபோல், டெல்லி பல்கலைக் கழகத்திலேயே உள்ள சுமார் 4 பணியிடங்களும் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. இதற்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை அறிவிப்பு வெளியிட்டும் எவரும் பணியமர்த்தப்படவில்லை. டெல்லிபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தயாள்சிங் கல்லூரியிலும் 4 ஆண்டுகளாக நிரந்தரப் பேராசிரியர் அமர்த்தப்படவில்லை. டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக செயல்படும் திறந்தவெளி பிரிவின் ஒரே ஒரு தமிழ் பேராசிரியர் ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற உள்ளார்.
இப்பிரச்சினைகள் குறித்த செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த செப்டம்பர் 9, 2014 மற்றும் பிப்ரவரி 7, 2019-ல் வெளியானது. முதல் செய்தியின் தாக்கமாக பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அப்பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. இரண்டாவது செய்தியால் இப்பிரச்சினை முந்தைய அதிமுக அரசின் கவனத்தை பெற்றது. இதனால், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதன்மை உள்ளுறை ஆணையராகஇருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி நா.முருகானந்தம் அங்குள்ள தமிழ் ஆர்வலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அவருக்கு மாற்றலானதால் பிறகு வந்த தமிழக அதிகாரிகள் இப்பிரச்சினையில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
மவுலானா அபுல் கலாம் ஆசாத்தால் 1947-ல் தொடங்கப்பட்ட மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் (பிஎட்) நிறுவனம், மிராண்டா கல்லூரிக்கு அருகில் உள்ளது. பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வந்த தமிழுக்கான 7 மாணவர்களின் கல்வியியல் பிரிவு கடந்த 2016-ம் ஆண்டு மூடப்பட்டது. இதன் செய்தி கடந்த 2019-ல் பிப்ரவரி 20 மற்றும் மே 14-ல் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அக்கல்வி நிறுவனத்திற்கு கடிதம் எழுதியும் கண்டுகொள்ளப்படவில்லை.
தமிழக அரசால் கடந்த 2007-ல்,அளிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கானப் பிரிவு தொடங்கப் பட்டது. இந்தப் படிப்பில் டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச்சூழலில், முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அனுமதியிருந்தும் பேராசிரியர்கள் அமர்த்தப்படாததால் முனைவர் ஆய்வு மட்டும் தொடர்கிறது.