உக்ரைன் விவகாரம் தொடர்பாக விரைவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதுவரை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவில்லை என்றால் இந்த பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஏற்பாடு செய்திருக்கிறார். இது தொடார்பாக பிரான்ஸ் நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைன் விவகாரம் குறித்து பேச இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பல இணைந்து உக்ரைன் சர்ச்சை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை குறித்து ஆலோசிக்கப்படும்.
அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் சந்திப்பின்போது பேசப்படும் விவகாரங்களின் பட்டியலை அமேரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆந்தணி பிளின்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தயாரித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்க தரப்பும் உறுதி செய்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்காவிட்டால் நிச்சயம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எல்லையில் ரஷ்யா படையெடுப்பை துரிதப்படுத்துவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. அமெரிக்காவின் மாக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் எல்லையில் ரஷ்ய படைகள் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
சர்ச்சை பின்னணி: 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது. இந்தச் சூழலில் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.