சென்னையில் அண்மையில் தமிழக முதல்வர் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அவர் விருதுகளை வழங்கினார்.

மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவுக்கு சிறந்த பணிக்கான விருது கிடைத்தது.

இதுகுறித்து காவல் ஆணையர் கூறியதாவது:

மதுரை நகரில் குற்றங்களை தடுக்க 4 திட்டங்களை முன்னெடுத்தோம். பழைய குற்றவாளிகள், ரவுடிகள் பட்டியலை ஆவணப்படுத்தினோம். குற்றம் புரிவோரை துரிதமாகக் கைது செய்தல், பழைய குற்றவாளிகளின் தொடர் குற்றங்களை தடுத்தல், பத்திரம் எழுதி வாங்குதல், குண்டர் சட்டத்தில் கைது செய்தல், ஜாமீனில் வெளிவருவோரை நடமாட்டத்தைக் கண்காணித்தல், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்று தருதல் போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தினோம்.

மேலும் 110- சிஆர்பி சட்டப் பிரிவின் கீழ், குற்றச் செயல்களை தடுக்க, பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, அதை மீறிய 148 பேரை கைது செய்தோம். குற்ற வழக்குகளில் சிக்குவோர், வழக்கை தொடர்ந்து நடத்த வழிப்பறி, கஞ்சா விற்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டுப்பாட்டில் வைத்தோம்.

2021-ல் வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் குறைக்கப்பட்டன. குற்ற வழக்குகளை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவின. நகர் முழுவதும் 12,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் புதிதாக 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாதிரியான தொடர் நடவடிக்கைகளால் விருது கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.