காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களை உத்தரவை ஏற்று பெண் நிருபர்களும், செய்தி வாசிப்பாளர்களில் தங்கள் முகத்தை துணியால் மூடி செய்தி வழங்கி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார்.

தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்ப்பு தெரிவித்திருந்து. இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கிடையே ஆப்கானில் இந்த பிற்போக்குத்தனமான உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சனிக்கிழமை முதல் பொதுவெளிகளில் வரும் பெண்கள் தங்கள் உடல்முழுவதையும் மறைக்கும் புர்கா வகை ஆடைகளை அணிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை முகத்தை மறைத்து திரையில் தோன்றும்படி அறிவுறுத்தியுள்ளன. ஆனால் சனிக்கிழமை பெரும்பாலான பெண் செய்தி வாசிப்பாளர்கள் தங்களது முகத்தை தெரியும்படியே செய்திகளை வாசித்தனர்.

இந்த நிலையில் இன்று ஆப்கானின் பிரதான செய்தி நிறுவனங்களாக டோலோ, ஷம்ஷாத், அரியானா ஆகியவற்றில் பெண் செய்திவாசிப்பாளர்கள் முகத்தை மூடியபடி செய்தி வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சோனியா நியாசி (டோலோ நிறுவனத்தின் செய்தியாளர்) கூறும்போது, “ நாங்கள் முகத்தை மறைக்கும் முடிவை எதிர்த்தோம். ஆனால் டோலோ நிறுவனம் முகத்தை மறைக்காத செய்தி வாசிப்பாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள் அல்லது பணி நீக்க செய்யப்படுவார்கள் என்று கூறியது. நிறுவனம் கட்டாயப்படுத்தியதன் காரணமாகவே நாங்கள் முகத்தை மறைக்கும் துணியை அணிந்தோம்” என்றார். இதில் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சில ஊடகங்களில் ஆண்களும் தங்கள் முகத்தை மறைக்கும் மாஸ்க் அணிந்திருந்தனர்.

 

ஆப்கானில் தலிபன்களுக்கு ஆட்சிக்கு முன்னர் பெண் செய்தியாளர்கள் வெறும் தலையை மட்டும் துணியால் மூடி செய்தி வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் தங்கள் உத்தரவை ஊடகங்கள் பின்பற்றி இருப்பதற்கு தலிபான்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தலிபன்களின் உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.