இதர மொழிகளில் ரீமேக் ஆவது போல், தமிழிலும் ‘த்ரிஷ்யம் 2’ ரீமேக் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமின்றி சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலுமே ‘த்ரிஷ்யம்’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணி இணைப்பில் ‘த்ரிஷ்யம் 2’ உருவானது. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தி ரீமேக் முடிவாகியுள்ளது. ஆனால், தமிழ் ரீமேக் எப்போது என்ற கேள்வி எழுந்தது. சில தினங்களாகவே ‘விக்ரம்’ படத்துக்கு முன்பாக ‘பாபநாசம் 2’ படத்தை கமல் முடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவியது. ஆனால், இது வெறும் வதந்திதான் என்பது தெரியவந்துள்ளது.
‘பாபநாசம் 2’ தொடர்பாக விசாரித்தபோது, “இப்போதைக்கு ‘விக்ரம்’, ‘இந்தியன் 2’ மற்றும் ‘பிக் பாஸ் 5’ ஆகியவற்றில் மட்டும்தான் கமல் கவனம் செலுத்தவுள்ளார். ‘பாபநாசம் 2’ தொடர்பாக இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவே இல்லை” என்று தெரிவித்தார்கள்.
ஒருவேளை ‘பாபநாசம் 2’ தொடங்கப்பட்டால் கமலுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பதுதான் அனைவருடைய கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், ‘பாபநாசம் 2’ படத்தில் கமல் – கெளதமி இணைந்து நடித்திருந்தார்கள். அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள சூழலில் ‘பாபநாசம் 2’ குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை என்பதுதான் உண்மை.