’கர்ணன்’ டீஸரைத் தான் பார்த்துவிட்டதாகவும், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அளவுக்கு அது சிறப்பாக இருப்பதாகவும் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பாராட்டியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், யோகி பாபு, ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது. ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு பாடல்களுமே ‘கர்ணன்’ படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. மார்ச் 23ஆம் தேதி மாலை கர்ணன் திரைப்படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனுஷின் நெருங்கிய நண்பரும், அவரது ’திருடா திருடி’ திரைப்படத்தின் இயக்குநருமான இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, ’கர்ணன்’ டீஸர் குறித்துப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில், “எச்சரிக்கையாக இருங்கள்! நேற்று ‘கர்ணன்’ டீஸர் பார்த்தேன். குலை நடுங்க வைக்கிறார் மாரி செல்வராஜ். தனுஷ் என்ற அசுரனை எதிரியாக நினைப்பவர்களும் கொண்டாடித்தான் ஆக வேண்டும் எனத் திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, முடிவில் பயத்தையும் பதற்றத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக!” என்று சுப்பிரமணியம் சிவா குறிப்பிட்டுள்ளார்.