பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும்” என திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அனைத்துத் தரப்பு மக்களின் நலனை திமுக காற்றில் பறக்கவிட்டு விட்டது.
திமுக அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பையேற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைக்கு, மாநில அரசால் லிட்டருக்கு மூன்று ரூபாயும், மத்திய அரசால் ஐந்து ரூபாயும் குறைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாய் 85 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டில் 17 ரூபாய் 68 காசாக பெட்ரோல் விலை உயர்ந்து இருக்கிறது. தமிழக அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டாலும், கடந்த ஓராண்டில் உயர்ந்த 17 ரூபாய் 68 காசு மூலம் முன்பைவிட கூடுதல் வருவாய் தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது.
டீசலைப் பொறுத்த வரையில், திமுக ஆட்சி வந்த பிறகு ஒரு காசு கூட குறைக்கப்படவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது ¯டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.. இன்றைக்கு, மத்திய அரசால் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 94 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்த ஓராண்டில் மட்டும் டீசல் விலை 14 ரூபாய் 29 காசு உயர்ந்து இருக்கிறது. இந்த உயர்த்தப்பட்ட விலை மூலம் தமிழக அரசுக்கு முன்பைவிட கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. இது தவிர, பெட்ரோலியப் பொருட்களின் மூலமான வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேர்தல் வாக்குறுதிப்படி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன் வராத திமுக அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் என்று சுட்டிக்காட்டி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், துக்ளக் இதழின் 52வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதியமைச்சர் அந்த விழாவிற்கு வருகை புரிந்த ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், “தமிழக நிதியமைச்சர் ஒப்புக் கொண்டால், பெட்ரோல் மற்றும் டீசலை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வரும் வகையில், இந்தப் பொருளை ஜிஎஸ்டி கவுன்சிலில் சேர்க்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்பிற்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று 24-01-2018 அன்று பேசி இருக்கிறார். இந்தச் செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 04-04-2018 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக சட்டமன்றப் பேரவையில் 28-06-2018 அன்று திமுக சார்பில் வெட்டுத் தீர்மானம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு திமுக ஆதரவளிக்கும் என்றும், நிதியமைச்சர் அவர்களுடைய கருத்து திமுக-வின் கருத்து அல்ல என்றும் சில மாதங்களுக்கு முன் திமுக-வின் பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான டிஆர் பாலு தெரிவித்து இருந்தார். இதிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் திமுக-வும், மத்திய அரசும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதன்மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, முதல்வர் மத்திய நிதி அமைச்சருடனும், மற்ற மாநில முதல்வர்களுடனும் கலந்து பேசி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று அதிமுக சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.