திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருவண்ணாமலை அடுத்த தண்டரை கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அடுத்த வெறையூர் அருகேவுள்ள தண்டரையில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே தண்டவாளத்தை தினமும் 3 ஆயிரத்துக்கும் ஏற்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இதில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றுச் செல்லும் லாரிகளும் அடங்கும்.
இந்நிலையில் இங்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் துவங்கியுள்ளன. இதைக் கேள்விப்பட்டதும் சுற்றுப்புற பகுதியிலிருந்து பொதுமக்களும், விவசாயிகளும் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தண்டரை ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக மேம்பாலம் அமைத்திட கோரி மனு அளிக்கப்பட்டது.
ஆனானந்தல், மதுராம்பட்டு, அண்டம்பள்ளம், நாரையூர், இசுக்கழி காட்டேரி, கீழ்கரிப்பூர், ஆண்டியாப்பாளையம், தண்டரை ஆகிய பகுதிகளில் 500 ஏக்கர்களுக்கு மேல் கரும்பு பயிரிடப்படுவதாகவும், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் திருக்கோயிலூர் பண்ணாரி சர்க்கரை ஆலைக்கு லாரிகளில் கரும்பு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.