8 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலியா

8 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலியா

8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எதிவரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்க உள்ளிட்ட முன்னணி அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா, அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய அடுத்த தொடர்களுக்காக தயாராகும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய அணியின் போட்டி அட்டவணைகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று(பிப்.23) அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியாக எதிர்வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அப்போது கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மணற்காகிதத்தை கொண்டு பந்தை சேதப்படுத்திய காணொளிகளும் வெளியாகி சர்ச்சை சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாத தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த சர்ச்சைகள் காரணமாக இவ்விரு அணியும் இரு தரப்பு டெஸ்ட் தொடர்களில் பெரிதளவில் சந்திக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் தான், தற்போது 8 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது செப்டம்பர் 24ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரானது அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கும் நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது. எனவே, புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற இரு அணிகளுமே இந்தத் தொடரை முக்கியமாகக் கருதுகின்றன. குறிப்பாக, 2018-ல் 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இம்முறை அதற்குப் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.