இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்:
நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!
பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.
அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!
மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்
தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை, இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.
சீமான்
எவராலும் குறை சொல்லமுடியாத மனித புனிதர் நல்லகண்ணு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த மனவலியாக இருக்கிறது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய்
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் இரா.நல்லகண்ணு காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
செல்வப்பெருந்தகை
தகைசால் தமிழர் இரா. நல்லக்கண்ணு மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும்.
கமல்ஹாசன்
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.
அன்புமணி
அடித்தட்டு மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
தோழர் நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பொதுவுடைமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நயினார் நாகேந்திரன்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி:
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான இரா. நல்லக்கண்ணு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
‘தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்’ நல்லக்கண்ணுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
