தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னையில் 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும், கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில், “உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நியாயமானது தான். முந்தைய ஆட்சியில் கஜானாவையே காலி செய்துவிட்டு போய்விட்டார்கள். ஆனால் எல்லாத்தையும் சரி செய்து முதல்வர் விஜய் உங்களுக்கு செய்து கொடுப்பார். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்”என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு தேவையானதை செய்து தருவோம். கடந்த ஆட்சிகளில் போராட்டம் பண்ண விடமாட்டார்கள். இரவோடு இரவாக தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
நம் முதல்வர் கண்டிப்பாக உங்களுக்கு தேவையானதை செய்வார். நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல்வர் வருத்தப்பட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம், இது உங்கள் ஆட்சி. எப்போது வேண்டுமானால் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். எங்கள் அலுவலக கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும், அதுதான் எங்கள் கோரிக்கை.
நீங்கள் இங்கு இருக்கும்போது எங்களுக்கு தூக்கம் வருவதில்லை, குறிப்பாக எங்கள் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை. ஒவ்வொரு முறை எங்களைப் பார்க்கும்போது எதாவது செய்ய வேண்டும் என்று கூறுவார். இங்கு போராட்டத்தில் ஈடுபடும் யார் மீதும் கை வைக்கவோ, மிரட்டவோ கூடாது என முதல்வர் கூறியிருக்கிறார்” என்று பேசினார்.
அமைச்சர் ராஜ்மோகன், “போன ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் உண்மையில் கஜானாவையே காணவில்லை. இருந்தாலும் முதல்வர் விஜய் அனைத்தையும் செய்து கொடுப்பார்” என்றார்.
நிர்மல்குமார், “இது உங்களுடைய அரசு. உங்கள் அண்ணன் ஆட்சி செய்கிறார். உங்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறார்? உங்களுக்கு என்ன தேவையோ, அதை உரிய நேரத்தில் முதல்வர் நிச்சயம் செய்து கொடுப்பார்” என்று கூறினார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்த மாதம் முதல் தினசரி ரூ.50 உணவுப்படி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 197 வார்டுகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள வார்டுகளில் இடம் கண்டறிந்து கழிப்பறைகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். 4, 7, 8 ஆகிய மண்டலங்களில் பழைய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், புதிதாக 300 வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தின்போது உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்துக்கு முன்பாக ரெயின் கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும், மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறும். அப்போது முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதையடுத்து, அரசின் உறுதிமொழிகளைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
