பாட்டிக்கு கூலிங்கிளாஸ் பரிசளித்த முதல்வர் விஜய்

பாட்டிக்கு கூலிங்கிளாஸ் பரிசளித்த முதல்வர் விஜய்

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம் திரும்பும் வழியில், சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடினார்.

முதல்வர் விஜய் வருகையால் அப்பகுதியே பெரும் பரபரப்பை அடைந்தது. முதல்வரை வரவேற்ற விவசாய குடும்பத்தினருக்கு, விஜய் பட்டு வேட்டி, சேலைகளை வழங்கினார்.

எந்தவிதமான விவசாயம் செய்கிறீர்கள், எவ்வாறு வருவாய் ஈட்டுகிறீர்கள் என்பது குறித்து விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுள்ளார். அதற்கு, வீட்டுக்கு பின்னால் வாழை மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம், அது ஒன்றே வாழ்வாதாரம் என்று கூறியிருக்கிறார்கள் விவசாய குடும்பத்தினர்.

மேலும் தங்களுக்கு வேறென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்தும் விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பிறகு, விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி முதல்வர் விஜய்யை வழியனுப்ப அவருடன் கைகோர்த்தபடி வந்தார். அவருக்கு பிரியாவிடை கொடுத்த முதல்வர் விஜய், தான் அணிந்திருந்த விலை மதிப்பு மிக்க கண்ணாடியை பாட்டிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

விவசாயி வீட்டிலிருந்து ஒன்றாக கைகோர்த்தபடி வந்த போது, அங்குக் கூடியிருந்த மக்களுக்கு விஜய் கையசைத்ததோடு, பாட்டியையும் கையசைக்குமாறு கூறினார். உடனே பாட்டியும் முதல்வருடன் இணைந்து மக்களைப் பார்த்து கையசைத்ததைப் பார்த்த மக்கள் புன்னகையுடன் விஜய்க்கு கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதல்வர் விஜய் அணிந்திருந்த கண்ணாடியை போட்டுக் கொண்டதும், பாட்டிக்கு மகிழ்ச்சியும் வெட்கமும் அதிகரித்தது. அந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

முதல்வர் விஜய் அணிந்திருந்த கண்ணாடி என்பதால், அக்கம் பக்கம் வீட்டில் உள்ள இளைஞர்கள், அந்த பாட்டியைப் பார்த்து ஒரு பக்கம் பொறாமை பட்டனர். பிறகு நெருங்கி வந்து கண்ணாடியை தாங்கள் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிறகு, சேலம் விமான நிலையம் செல்லும் வழியில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த மற்ற பெண்களிடமும் முதல்வர் விஜய் பேசி அங்குள்ள நிலைமை மற்றும் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.