இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், இணைப்பு நாடுகள் மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு தற்போது விரிவடைந்துள்ளது. பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன.
பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இணைப்பு நாடுகளாக உள்ளன.
‘வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’ என்ற கருப்பொருளில் இந்தியா தனது தலைமைப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், பொதுவான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி, கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய 3 முக்கியத் தூண்களின் அடிப்படையில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதத் தடுப்பு, பருவநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதி நிலவரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன.
இந்தியா ஏற்கனவே 2012, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளது. தற்போது 4-வது முறையாக 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. மேலும், பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாகவும் 2026 அமைந்துள்ளது.
உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 31 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டை முன்னிட்டு 35 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நாளை டெல்லியில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரேசில் அதிபர் மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அவருக்குப் பதிலாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி மவுரோ வியேரா கலந்து கொள்கிறார். ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸும் மாநாட்டில் பங்கேற்கிறார்.
புதினுக்கு திருக்குறள் பிரதியை வழங்கிய மோடி
இந்த நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷிய அதிபர் புதினை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது புதினுக்கு திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பு பிரதியை பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றுகூட உள்ளதாகவும், உலக நலன் குறித்த பொதுவான விருப்பத்துடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், பிரிக்ஸ் மாநாட்டுக்கான மேடை தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை துரிதப்படுத்தவும், சிறந்த உலகத்திற்கான பொதுவான செழிப்பை மேம்படுத்தவும் உலகத் தலைவர்கள் விவாதித்து நடவடிக்கை எடுக்க வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி மவுரோ வியேரா, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், எகிப்து அதிபர் எல்-சிசி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும், சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ, நைஜீரியா துணை ஜனாதிபதி காசிம் ஷெட்டிமா, கியூபா வெளியுறவுத்துறை மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா, பெலாரஸ் வெளியுறவுத்துறை மந்திரி மக்சிம் ரிஜென்கோவ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வியட்நாம் பிரதமர் லே மின் ஹங், கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
