அசானி புயல் தனது திசையை மாற்றி அருகில் காக்கிநாடா கடற்கரை அருகே கரையை கடக்கும் என விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் சுனந்தா தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாரல் மழையாக இருந்த நிலையில் நேற்று காலை 9 மணி தொடங்கி அண்ணாநகர், வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ஆவடி, சேத்துப்பட்டு, அனகாபுத்தூர், மேடவாக்கம், ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
சென்னை தவிர்த்து வேலூர், சேலம்,திருச்சி, விழுப்புரம், திருவாரூர் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்தது.
வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை தெரிவித்தது. அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்று தெரிவித்தது. இது ஒரிசா மாநில கடற்கரையில் கரையை கடக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் அசானி புயல் தனது திசையை மாற்றி அருகில் காக்கிநாடா கடற்கரை அருகே கரையை கடக்கும் என விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் சுனந்தா தெரிவித்துள்ளார். மேலும் இது வலுவிழந்து சூறவாளியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் ஆந்திர கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனையடுத்து மக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நேற்று வரை வடமேற்கு திசையை காட்டிய பாதை கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. எனவே, இது ஆந்திராவுக்கு மிக அருகில் உள்ளது என சுனந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் வங்காள விரிகுடாவில் ஒரிசா பகுதியில் கரையை கடக்கும் என முன்னதாக கணித்ததாகவும், ஆனால், எதிர்பாராத விதமாக புயல் காக்கிநாடா அருகே கரையை கடக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.