மயிலாடுதுறையில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
டெல்டா மாவட்டங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்களில், தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்குவதற்கான தனிச் சட்டம் இயற்ற வேண்டும். நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தால்தான், அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
பயிர்க் காப்பீடு திட்டத்தில் பாகுபாடுகள் காட்டப்படுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி உபரிநீர் நேரடியாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்டினால், 50 டிஎம்சி வரை தண்ணீரைச் சேமிக்க முடியும். இதை நிறைவேற்ற தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட நிலையில், இதயம், நரம்பியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இல்லை. இந்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும், மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீடு ஏற்புடையது அல்ல. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கேற்ப ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றார்.