சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் 90 சதவீத வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடந்தது. இத்தேர்தல், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளுக்கு 2,670 பேர் போட்டியிட்டனர்.

வேட்பாளர்களின் தேர்தல் செலவினமாக 90 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனாலும், வேட்பாளர்களுக்கு சில கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது.

இதுவரை, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் உட்பட, 2,500 பேர்தேர்தல் செலவினங்களை சமர்பித்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டும், தேர்தல் செலவினங்களை சமர்பிக்கவில்லை. எனவே தேர்தல் கணக்கை சமர்பிக்காதவர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.