மத்திய அரசின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து சீரடி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை வடகோவை ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 6 மணிக்கு கிளம்புகிறது.

பாரத் கௌரவ்  திட்டத்தின் மூலம் ரயிலை தனியார் வசம் ஒப்படைத்து கோவையில் இருந்து சீரடிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை வாரம் ஒரு முறை இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான  டிக்கெட் விற்பனை, பராமரிப்பு பணிகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள்  உள்ளிட்ட அனைத்தையுமே இந்த ரயிலை இயக்கும் தனியார் நிறுவனமே மேற்கொள்ள வேண்டும்.

இந்த ரயிலில் கோவையில் இருந்து சீரடி செல்ல இரண்டு விதமான பயண திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பயண டிக்கெட் மட்டும் எடுத்து கொள்ளும் வகையில் ஒரு திட்டம் இருக்கின்றது. இதில், முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்ய 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணிக்க 7,000 ரூபாயும், மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணம் செய்ய 5000 ரூபாயும்,  குளிர் சாதன வசதியற்ற படுக்கை வசதி கொண்ட டிக்கெட் 2500 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பேக்கேஜ் அடிப்படையிலும் ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கோவையில் இருந்து சீரடி தரிசனத்திற்கு சிறப்பு தரிசன அனுமதி, தங்குமிடம், வழிகாட்டி, இன்சூரன்ஸ் போன்றவை அடங்கிய பேக்கேஜாக ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டு அதற்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் முதல் வகுப்பு ஏசி 12,999 ரூபாய் , இரண்டாம் வகுப்பு ஏசி  9,999 ரூபாய் மூன்றாம் வகுப்பு ஏசி 7,999 ரூபாயும்,  குளிர்சாதன வசதியற்ற படுக்கை வசதி கொண்ட டிக்கெட் 4,999 ரூபாயும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சீரடி தரிசன ரயில்  திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர், மந்தராலயம் வழியாக சீரடி அடைகிறது.

வழியில் பக்தர்களை ஏற்றியபடி ஐந்து நாட்கள் பயணிக்கும் வகையில் கோவை முதல் சீரடி தரிசனம் ரயில் சேவையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் சீரடி பயணிக்க ஏராளமான பக்தர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் தானேவிற்கு குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தானே சென்று பின் அங்கிருந்து மற்றொரு ரயில் மூலம்  சீரடி செல்ல வேண்டும். இரு ரயில்கள் மாறி செல்ல வேண்டும். இரு ரயில்களுக்கும் சேர்த்து கோவையில் இருந்து
1 AC  9540 ரூபாய் கட்டணம் ( தனியார் ரயிலில் 10 ஆயிரம்)
2 AC 5680 ரூபாய் கட னணம் ( தனியார் ரயிலில் 7000 ரூபாய் கட்டணம்)3 AC 3960 கட்டணம் ( தனியார் ரயிலில் 5000 ரூபாய் கட்டணம்)
2 sleeper non ac 1,770 கட்னணம் (தனியார் ரயிலில் 2500 ரூபாய் கட்டணம்) என போக வர கட்டணம் செலவாகின்றது .

இந்த ரயிலை அரசு இயக்கினால் 36 லட்சம் செலவாகும். தனியார் இயக்குவதால் 46 லட்சம் செலவாகின்றது. ஒருமுறை சீரடி டிரிப்பிற்கு 10 லட்ச ரூபாய் லாபமாக தனியாருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிட தக்கது.

இந்நிலையில், ரயில்களை தனியாருக்கு விற்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் கோவை ரயில் நிலையம் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.