கரோனா வைரஸ் பரவல் முதலில் ஏற்பட்ட வூஹான் மாகாணத்தில் மீண்டும் கரோனா பரவத் தொடங்கி இருப்பதால் அங்குள்ள மொத்த குடியிருப்புவாசிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவின் வூஹான் உட்பட பல மாகாணங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கி உள்ளது.

அந்த வகையில் வூஹானில் உள்ள மொத்த குடியிருப்புவாசிகளுக்கும் (அதாவது 1.1 கோடி மக்களுக்கு) கரோனா பரிசோதனைகளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை வூஹானின் மூத்த அதிகாரி லீ உறுதி செய்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா பரவல் கண்டறியப்பட் டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி கொண்டிருக்கின்றன.

சீனாவில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசு கூறிவந்த நிலையில் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தற்போது கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.இந்த மாகாணங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.