சென்னை: திருப்பதி கோயிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு இன்று (மே 31) ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” திருச்செந்தூர் கோயிலில் ரூ.200 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். திருச்செந்தூர் கோயிலுக்கு நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால், திருப்பதி கோயிலுக்கு இணையா க்யூ கம்ப்ளக்ஸ் (Queue complex) ஒன்றுகட்டி, அதன் வழியாக படிப்படியாக பக்தர்களை அனுப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஒரே நேரத்தில் 5000 பேர் வந்தால்கூட சமாளிக்கலாம் என்றே நினைக்கிறேன்.
இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால், சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி, திருத்தனி, ராமேஸ்வரம், பழனி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட திருக்கோயில்களும் முக்கியத்துவம் பெறும் வகையில், பல்வேறு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வரைபடம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.