எல்லாருக்குமான இந்த உலகத்தில் மனிதர் ஒரு பகுதிதான் என்பதை உணர்த்தும் படைப்பாக உருவாகியிருக்கிறது ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ (Jurassic World Dominion). (அலர்ட்: கொஞ்சம் ஸ்பாய்லர்கள் இருக்கக் கூடும். ஆனால், அவை பெரிதாக திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை பாதிக்காது.)

மனிதர்களும் டைனோசர்களும் ஒருங்கே வாழும் யுகத்தில் இருக்கும் பயோசின் சரணாலயத்தில் இயற்கையின் சமநிலையை அழிக்கும் வகையிலும், உலகம் முழுக்க உணவு வறட்சியை ஏற்படுத்தும் வகையிலும் வெட்டுக்கிளிகள் (லோகஸ்ட்) மரபணு மாற்றம் செய்யபட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதன் டிஎன்ஏ மாதிரியை கைப்பற்ற பயோசின்னுக்குள் டாக்டர் எல்லிசாட்லர் (லாரா டெர்ன்) மற்றும் டாக்டர் ஆலன் (சாம் நீல்) நுழைகின்றனர்.

இதற்கு அப்படி மற்றோரு புறத்தில் ஓவன் (கிறிஸ் பிராட்) மற்றும் கிளாரி (பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்) கடத்தப்பட்ட தங்களது மகளை மீட்க பயோசின்னுக்குள் நுழைகின்றனர்.

பயோசின்னுக்குள் நுழைந்த இந்த இரண்டு தரப்பினும், நுழைந்ததற்கான அவர்களின் காரணம் நிறைவேறியதா? எப்படி வெளியேறினர்? – இந்தக் கேள்விகளுக்கான விடைகளை சிறந்த காட்சியனுபவத்துடன் சொல்ல முயற்சித்திருக்கும் படம் ‘ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன்’.

2018-ம் ஆண்டு வெளியான ‘ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டோம்’ படக் கதையின் தொடர்ச்சிதான் தற்போது வெளியாகியிருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’.

 

படத்தில் கிறிஸ் பிராட் மிரட்டியிருக்கிறார். டைனோசரிடமிருந்து தப்பிக்கும் காட்சிகள், ஸ்டன்ட் காட்சிகள், ஆக்‌ஷன் சீக்வன்ஸ்கள் என முழு படத்திற்கும் பலம் சேர்க்கிறார். அவரது மனைவியாக வரும் பிரைஸ் டல்லாஸ் பதறும் காட்சிகள் நம்மையும் சேர்த்தே பதறவைக்கின்றன. குறிப்பாக ஒற்றை ஆளாக காட்டில் சிக்கிகொள்ளும் காட்சியில், முகத்தில் அந்த பயத்தையும், பதற்றத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தி நமக்கும் அந்த உணர்வை அப்படியே கடத்துவதில் பாராட்டு பெறுகிறார்.

அதேபோல, பழைய காதலர்களாக ஒன்று சேரும் லாரா டெர்ன் மற்றும் சாம் நீல் கெமிஸ்ட்ரி சிறப்பாக பொருந்தியிருக்கிறது.

சாம் நீலை பார்ப்பதற்காக அவரது இடத்திற்குள் லாரா டெர்ன் நுழையும்போது, இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தான் தங்கியிருக்கும் இடத்தில் வைத்திருக்கிறார் சாம் நீல். லாரா நுழைந்தும் அவருக்கு தெரியாமல் எடுத்து மறைப்பதில் துளிர்கிறது இருவரின் முதிர்ந்த காதல். மைசி கதாபாத்திரத்தில் டீன்ஏஜ் பெண்ணாக வரும் இஸபெல்லா செர்மன் அழகில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈர்க்கிறார்.

 

ஜுராசிக் உலகின் இறுதி அத்தியாயமாகவும் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரசிக்க நிறையவே உள்ளது. தொடக்கத்தில் பொறுமையாக நகரும் திரைக்கதை, இடைவேளைக்கு முன் சூடுபிடிக்கிறது.

குறிப்பாக டைனோசர்கள் துரத்த டூவிலரில் கிறிஸ்பிராட் நிகழ்த்தும் சாகசங்கள், மறுபுறம் அவரது மனைவி பிரைஸின் சேஸிங், லோகஸ்ட்களின் படையெடுப்பு, டைனோசரின் கடத்தல் என இடைவேளைக்கு முன்பு விறுவிறுப்பு தொற்றிக்கொண்டு, இரண்டாம் பாதியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

இரண்டாம் பாதியில் கதை சொல்லவேண்டிய நிர்பந்தமும், விறுவிறுப்பான காட்சிகளையும் கோர்த்திருக்கிறார் இயக்குநர் கொலின் ட்ரெவோரோ. ஆனால், இறுதிப் பாகம் என கூறப்பட்டதால், வழக்கமான காட்சிகளிலிருந்து விலகி சர்ப்ரைஸ் காட்சிகள் நிறைந்திருக்கும் என எதிர்பார்த்திருந்த ஜுராசிக் உலக ரசிகர்களுக்கு இப்படம் சற்று ஏமாற்றம் தான்.

இந்தப் பாகத்தில் வழக்கத்திற்கு மாறாக சயின்ஸ் பிக்‌ஷன் கதைக்களத்தை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் டைனோசர்களை முதன்படுத்துவதிலிருந்து திசைதிரும்பியிருக்கும் கவனத்தால், பல்வேறு எதிர்பார்ப்பை சுமந்து வந்த ரசிகர்களுக்கு அதிருப்திதான்.

 

தவிர, விஎஃப்எக்ஸ், பின்னணி இசை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. குறிப்பாக டைனோசருக்கு பயந்து ஓடி, தண்ணீருக்கு அடியில் பிரைஸ் டல்லாஸ் மூழ்கி ஒளிந்திருக்கும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் உண்மையில் பாராட்ட வைக்கிறது.

ஒளிப்பதிவும், விஎஃப்எக்ஸும் அந்தக் காட்சிக்கான தரத்தை கூட்டியிருக்கும். படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவின் உழைப்பும் அபாராமானது. படத்தின் இறுதிக்காட்சியில் ‘என் குட்டிய என்கிட்டையே வந்து கொடுத்துட்ட’ என்பது போல தாய் டைனோசர் கிறிஸ் பிராட்டை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் காட்சி நெகிழவைக்கிறது.

இறுதியில் வரும், ‘இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல… எல்லா உயிரினங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த உலகத்துல நம்மளும் ஒரு பகுதிதான்’ என்ற வசனம் படத்திலிருந்து வெளியே வந்தபிறகும் மனதில் தேங்கிவிடுகிறது.

மற்றபடி, படத்தின் தமிழ் டப்பிங் சிறப்பாகவே வந்திருக்கிறது. சில இடங்களில் டைமிங் காமெடிகளும் பொருந்திப்போகிறது. படத்தின் தீவிர ரசிகர்களை தவிர்த்து, புதிதாக பார்ப்பவர்களுக்கு நல்ல திரை விருந்தாக படம் அமையும் என்பதில் மாற்றமில்லை.

மொத்தமாக படம் ஜுராசிக் வேர்ல்டு ரசிகர்களைத் தாண்டி, பொதுவான பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காத படைப்பாக வெளியாகியிருக்கிறது.