டெல்லி: பீரங்கிகளை அழிக்கும் திறன் கொண்ட ஹெலினா ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இந்திய பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ரக ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ. தயாரித்து வருகிறது. இதில் ஒன்றான ஹெலினா ஏவுகணை ராஜஸ்தானின் பொக்ரானில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. ஹெலினா ஏவுகணைகளை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று, அதை வானில் இருந்தவாரே 7 கி.மீ. தொலைவு வரை உள்ள எதிரி நாட்டு பீரங்கிகள் மீது ஏவி, அழிக்க முடியும் என்று டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

மழை, பலத்த காற்று என எந்த காலநிலையிலும், இரவு, பகல் என எந்த நேரத்திலும் இந்த ஏவுகணைகளை பயன்படுத்த முடியும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பு தளவாட இறக்குமதியை குறைத்துக்கொண்டு, அவற்றை இயன்றவரை உள்நாட்டிலேயே தயாரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஹெலினா ஏவுகணைகள் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.